நோர்வேயில் வாழும் ஈழத்தமிழ் மக்களின் உள்நாட்டு அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு அலுவல்கள்

• ஈழத் தமிழ் மக்களின் அடையாளங்களையும், நலன்களையும் பேணுவதுடன் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தினையும் வளர்த்தல்.
• புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் மக்களின் மொழி, பாரம்பரியம் உள்ளிட்ட இனத்துவ அடையாளங்களையும்(அடையாளங்கள), அவர்களின் கலாசாரம், கல்வி, இனநல்லிணக்கம், பொருளாதார மேம்பாடு மற்றும் நலன்சார் விடயங்களுக்காவும் செயற்படும்.
• புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் மக்கள்சார் அனைத்துலக விடயங்கள்:- இந்த அவையானது ஈழத்தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினைகளை சர்வதேச மட்டத்தில் எதிர் கொள்ளும் முகமாக அனைத்து நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுடன் ஒருங்கிணைந்து செயற்படும்.

தாயகத்தில் உள்ள ஈழத் தமிழர்களின் சுதந்திரம், இறைமை, மற்றும் மேம்பாட்டிற்காகச் செயற்படுதல்

1977ஆம் ஆண்டில் இலங்கைத்தீவில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் பெற்ற மக்கள் ஆணையின் பிரகாரம் இலங்கையிலுள்ள தமிழர்கள் தனித்துவமான தேசிய இனம், பாரம்பரியமான தாயகம், சுயநிர்ணய உரிமை, ஆகியனவற்றின் அடிப்படையில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசை தமிழர் தாயகத்தில் மீளவும் நிறுவுவதற்காகவென வழங்கப்பட்ட ஆணையின் முக்கிய அடிப்படைகளை மீளுறுதிப்படுத்தும் வகையில் 2009 மே 10ஆம் திகதி நோர்வேயில் இடம் பெற்ற வாக்கெடுப்பில் 98.95% ஆன ஈழத்தமிழ் மக்களால் வாக்களிக்கப்பட்டு மீளுறுதிப்படுத்தப்பட்ட "நோர்வேவாழ் தமிழ் மக்களின் ஆணை2009" இன் பிரகாரம் இலங்கையின் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட தனியரசு ஒன்று உருவாக்கப்படுவதற்காக இந்த அவை குரல் கொடுக்கும்.

தமிழீழத்தினைச் சர்வதேச சமூகம் இனம் காண்பதற்கும் ஏற்றுக் கொள்வதற்குமான செயற்பாடுகளில் இந்த அவையானது ஈடுபடும். அத்துடன், ஈழத்தமிழர்கள் தமது இறையாண்மையைக் கைவிடச் செய்வதற்கான முயற்சிகள் எந்த தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்டாலும் அதிலிருந்து பாதுகாப்பதற்காகவும் செயற்படும்.