'கல்லறைகள் திறந்துகொண்டன
மடிந்தவர்கள் வருகிறார்கள்.
மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு வந்துவிட்டன
புகழ் மலர்களோடும் உருவிய வாளோடும் வருகிறார்கள்
இதயத்தில் ஈழத்தின் விடுதலையை
ஏந்தி வருகிறார்கள்
ஈழ விடுதலை முரசு ஒலிக்கட்டும்
ஈழம் உதயமாகட்டும்
சுதந்திர ஈழக் கொடி பட்டொளி வீசிப் பறக்கட்டும்
ஆம்; ஐ.நா. சபைக்கு முன் சுதந்திர தேசங்களின் கொடிகளோடு... எங்கள் தமிழ் ஈழத் தேசக் கொடியும் பறக்கட்டும்!''

-பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில் வைகோ பீறிட்டுக் கிளம்ப... அரங்கம் அதிர்ந்தது!

இந்திய நாடாளுமன்றத்துக்குள் வைகோவை அனுப்ப இயலாமல், விருதுநகர் மக்கள் சிக்க னத்தைக் கடைப்பிடித்தாலும்... ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கூட்ட அரங்குக்குள் அவரை அழைத்துச் சென்றுவிட்டார்கள், ஈழத் தமிழர்கள். தென் தீவில் தமிழர் படும் துயரங்களை உலகத்தின் பார்வைக்குப் படையல் விரித்துத் திரும்பி இருக்கிறார் வைகோ.

''பிரஸ்ஸல்ஸ் மாநாட்டின் நோக்கம் என்ன?''

''உலக நாடுகளைப் பொறுத்தவரை... ஈழப் பிரச்னையில் அவர்களின் கண்கள் இப்போதுதான் திறக்க ஆரம்பித்து உள்ளன. 2009-ம் ஆண்டு மே மாதம் நடந்த கொடுமைகளை, உலகம் இதுவரை முழுமையாக உணரவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அவர்களுக்கு உறைக்கிறது. அதன் வெளிப்பாடுதான் பெல்ஜியம் நாட்டில் நடந்த பிரஸ்ஸல்ஸ் மாநாடு!

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் களும், முக்கியமாக இடதுசாரிப் பசுமைக் கட்சி களும், தமிழ் ஈழ மக்கள் அவையின் அனைத்து உலகச் செயலகமும் இணைந்து, இந்த மாநாட்டை ஏற்பாடு செய்து இருந்தன. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இது நடந்தது. 'இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்கி றோம்’ என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவு எடுத்ததும் இந்தக் கட்டடத்தில்தான். இதில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் களும், பல நாடுகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களும் கலந்துகொண்டனர். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த எம்.பி-யான பால் மர்ஃபி இதற்கான ஏற்பாட்டைச் செய்து இருந்தார்.

'இலங்கையில் நடந்து இருப்பது போர்க் குற்றம். அதையும் தாண்டிய இனப் படுகொலை’ என்பதை ஐக்கிய நாடுகள் அவை அமைத்த விசாரணைக் குழுவே ஒப்புக்கொண்ட நிலையில், ராஜபக்ஷே வைப் போர்க் குற்றவாளியாகக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி ஆக வேண்டும். இந்த நடவடிக் கைகளின் தொடக்கமே இந்த மாநாடு!''

''உங்களது பேச்சின் வழியாக நீங்கள் வழங்கிய ஆலோசனைகள் என்ன?''

''உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களின் நெஞ்சில் இருக்கும் சிந்தனைகளையே நானும் அந்த மாநாட்டில் சொன்னேன். 'ஈழப் பிரச்னையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லக்கூடியதாக உங்கள் ஆலோசனைகள் அமைய வேண்டும் அண்ணா’ என்று பலரும் என்னைக் கேட்டுக்கொண்டார்கள். சத்தியத்துக்கு சாட்சியங்கள் தேவை இல்லை. ஈழத் தமிழர் அனுபவித்த இன்னல்கள் சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன. ஈழத்தில் மருத்துவ மனைகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. படுகாயம் அடைந்தவர்களுக்கு மருந்துகளே இல்லை. மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்ய மயக்க மருந்துகள் இல்லை. பட்டாக்கத்திகளைக்கொண்டு உறுப்புகளை வெட்டினார்கள். குழந்தைகளுக்கு பால் பவுடர் வாங்க வரிசையில் நின்ற தாய்மார்கள், குண்டுவீச்சில் கொல்லப்பட்டார்கள். தமிழ்ப் பெண்கள் தனியாக இழுத்துச் செல்லப்பட்டு நிர்வாணம் ஆக்கப்பட்டு பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டனர். எல்லா சாலைகளிலும் தமிழர் பிணங்கள் சிதறிக்கிடந்தன. அழுகிப்போன உடல்களின் நாற்றம் காற்று மண்டலத்தையே நிறைத்தது.

'ஆயுதங்களை மௌனித்துவிட்டோம்’ என்று அறிவித்து, வெள்ளைக் கொடி ஏந்தி வந்த நடேசன், புலித்தேவன் போன்றவர்களைச் சுட்டுப் படுகொலை செய்தது கொடுமையிலும் கொடுமை. இதை எல்லாம் தமிழ்நாட்டுத் தெருக்களில் நாங்கள் சொன்னபோது, பலரும் நம்ப மறுத்தார் கள். ஆனால், இன்று ஐ.நா. அறிக்கையே அத்தனையையும் ஒப்புக்கொண்டு உள்ளது.

'ஐ.நா. அவை தனது கடமையைச் செய்யவில்லை’ என்றும் அந்த அறிக்கை குற்றம்சாட்டுகிறது. அதாவது, 'தமிழனாகப் பிறந்தான் என்ற ஒரே காரணத்துக்காக, இலங்கைத் தீவில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். தமிழ்ப் பெண் கள் சீரழிக்கப்பட்டு சிதறடிக்கப்பட்டனர்’ என்பதை உலகம் ஒப்புக்கொண்டது. இந்தச் சூழலில் இத்தனை அநியாயங்களையும் செய்த சிங்களவர்களோடு, இனியும் தமிழர்கள் ஒன்றாக வாழ முடியுமா? இதுதான் தமிழர்களின் உள்ளங்களில் உள்ள ஒரே ஒரு கேள்வி. 'சுதந்திரத் தமிழ் ஈழத்தை முன்வைத்து ஒரு வெகுஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதில், ஈழத்தில் வாழும் தமிழர்கள், வெளிநாடு களில் வாழும் தமிழர்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்’ என்ற கருத்தை நான் முன்வைத்தேன்!''

''இப்படி ஒரு வாக்கெடுப்பு நடத்துவதற்கு இலங்கை அரசு ஒப்புக்கொள்ளாதே?''

''இலங்கையின் ஒப்புதல் யாருக்கு வேண்டும்? இதைச் செய்ய வேண்டியது ஐக்கிய நாடுகள் அவை. கிழக்குத் தைமூர் தனி நாடாக வாக்கெடுப்பு நடத்திய ஐ.நா. மன்றம், தெற்கு சூடான் தனி நாடாக வாக்கெடுப்பு நடத்திய ஐ.நா. மன்றம், கொசாவா தனி நாடாக அனும தித்த ஐ.நா. மன்றம், தமிழ் ஈழம் சுதந்திர தேசமாக ஆவதற்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டாமா?

நிச்சயமாக, வாக்கெடுப்பு வேண்டும். அனைத்து நாடுகளின் பார்வையாளர்கள் கண்காணிப்பில் அது நடத்தப்பட வேண்டும். போர் நடந்தபோதும், கொடூரங்கள் தொடர்ந்த போதும் வேடிக்கை பார்த்த ஐ.நா. மன்றம் இனியும் அப்படி இருக்க முடியாது என்பதை, இந்த மாநாட்டில் பங்கேற்ற பலரும் சொன்னார் கள்.

சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான வாக்கெடுப்பு நடத்துவதும், ராஜபக்ஷேவைப் போர்க் குற்றவாளியாக நிறுத்தித் தண்டனை வாங்கித் தருவதும்தான், இந்த மாநாட்டின் இரண்டு நோக்கங்களாக இருக்க முடியும் என்று சொன்னேன்!

2010 ஜனவரியில் கூடிய டப்ளின் தீர்ப்பாயம், 'சிங்கள அரசின் போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியதைச் சுட்டிக்காட்டிய நான், 'ராஜபக்ஷேவையும், அவரது சகோதரர்களையும், அவர்களின் கொலைகாரக் கூட்டாளிகளையும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஏன் நிறுத்தக் கூடாது?’ என்று கேட்டபோது, ஆதரவு தெரிவித்தார்கள் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும். இதைப் பார்க்கும்போது, ராஜபக்ஷேவுக்கு நாள் நெருங்கிக்கொண்டு இருப்பது தெரிகிறது!''

''ஈழத் தமிழர்கள் பல்வேறு குழுக்களாகச் சிதறி இருக்கும் நிலையில், இது சாத்தியமா?''

''இது திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்ச் செய்தி!

புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள், ஒன்றுபட்ட சிந்தனையுடன்தான் இருக்கிறார்கள். ராஜபக்ஷே தண்டிக்கப்பட வேண்டும், தனித் தமிழ் ஈழம் மலர வேண்டும் என்றே நினைக்கிறார்கள். குமரன் பத்மநாபாவின் ஆதரவாளர்கள் சிலர்தான், குழப்பங்கள் விளைவிக்கிறார்கள். 'நாங்கள் புதிய உணர்வுடன் ஒற்றுமையாக இருக்கிறோம் அண்ணா. இதை தமிழ்நாட்டுக்குச் சொல்லுங்கள்’ என்று என்னைச் சந்தித்த அனை வருமே சொன்னார்கள்!''

Bilde: