மொரிஷியஸ் தமிழ் கோயில் கூட்டமைப்பு மற்றும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை இணைந்து நடாத்திய " சர்வதேச தமிழ் புலம்பெயர் ஒருமைப்பாடு மாநாடு " வெற்றிகரமாக நிறைவு பெற்றது. கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாட்டு மனித உரிமை சபை அமர்வுகள் இடம் பெற்ற நாட்களில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையால் ஜெனீவாவில் நடாத்தப்பட்ட " சர்வதேச தமிழர் உரிமை மாநாட்டின் வரிசையில் இம் மாநாடு 2 வது ஆகும் .

15 நாடுகளில் இருந்து 60 க்கும் மேலான பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்கள் , பேராசிரியர்கள் , வழக்கறிஞர்கள் , மனித உரிமை ஆர்வலர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் , மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் உட்பட கல்வியாளர்கள், ஊடகவியாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி ராமசாமி அவர்கள் கலந்துகொண்டார்.

வெள்ளிக்கிழமை காலை , நவம்பர் 8 திகதி தமிழ் பிரதிநிதிகள் குழு ஸ்ரீலங்காவில் நடைபெறும் பொதுநலவாய மாநாடு உட்பட பல பிரச்சினைகள் பற்றி கலந்துரையாட , மொரிஷியஸ் வெளியுறவு அமைச்சர் அர்விந் பூலெல்ல் அவர்களை சந்தித்தனர் . தமிழ் பிரதிநிதிகள் மற்றும் வெளியுறவு அமைச்சர் இடையில் சுமூகமான விவாதம் இடம்பெற்றது .

வெள்ளிக்கிழமை பிற்பகல் அதிகாரப்பூர்வமாக மாநாடின் திறப்பு விழா முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் சிங்கள பேரினவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவாக அமைந்திருக்கும் நினைவுத் தூவி மற்றும் " சிலம்பு " நினைவுச்சின்னம் அமைந்துள்ள ரோஸ் - மலை மையத்தில் மலர்வணக்கம் செலுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. கிராண்ட் பே பியூ பஸ்ஸின் மேயர் கவுரவ விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டரர் .

சனிக்கிழமை காலை நவம்பர் 9 ம் திகதி மாநாட்டின் முதலாவது அமர்வில் மொரிஷியஸ் நாட்டின் ஜனாதிபதி கைலாஷ் புர்ரியக் , மொரிஷியஸ் எம்.பி. பால் ரேமண்ட் பேரெங்கேர் (எதிர்க்கட்சி தலைவர்) , பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி ராமசாமி மற்றும் மொரிஷியஸ் தமிழ் கோயில் கூட்டமைப்பின் தலைவர் திரு மேனன் முர்தி ஆகியோர்கள் உரையாற்றினார்கள் .

சனிக்கிழமை மாலை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஏனைய அமர்வுகள் கிராண்ட் - பையீயில் உள்ள காலோடிய்னெ சர் மெர் விடுதியின் அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ் அடையாளம், தமிழ் கலாச்சாரம் , தமிழ் மக்களின் சமூக , பொருளாதார பாதுகாப்பு போன்ற பல தலைப்புகளில் , விவாதிக்கப்பட்டன . தமிழ் ஒருமைப்பாடு , போர் , தமிழின அழிப்பு , சர்வதேச சுயாதீன விசாரணை , ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமை உள்ளிட்ட ஈழத் தமிழர் குறிப்பிட்ட பல தலைப்புகளில் ஆழமாக விவாதிக்கப்பட்டன .

இறுதியாக மாநாட்டில் உரையாடப்பட்ட விடையங்களை உள்ளடக்கி தமிழின அடையாளத்தையும் , இனத்தையும், அவர்களின் தன்னாட்சி உரிமையும் நிலைநாட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈழத்தமிழர்கள் மீது முன்னெடுக்கப்படும் இன அழிப்பை அனைத்துலக சுயாதீன விசாரணையின் ஊடாக விசாரிக்கப்பட்டு தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தனித் தமிழீழத்தை வலியுறுத்தி பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்றும் அத்தோடு அவசர வேண்டுகோளாக

ஈழத்தமிழர்களை கட்டமைப்புசார் இன அழிப்பில் இருந்து பாதுகாக்க நிலைமாற்று அரசாங்கம் உருவாக்கம் பெறவேண்டும் என்றும் குரல் எழுப்பப்பட்டது.

இறுதியாக தமிழர்கள் ஒருமைப்பாட்டை நிலைநாட்டவும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உலகத் தமிழர் மறுமலர்ச்சி நோக்கத்துடன் சர்வதேச செயற்குழு ஒன்றை உருவாக்குவதாகவும் முடிவுசெய்யப்பட்டது.

நடைபெற்ற மாநாட்டை தொடர்ந்தே மொரிஷியஸ் நாட்டின் பிரதமர் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.